மனசில் ஈரம் மிச்சமிருக்கும்

0
200

சில திரைப்படங்கள் பார்க்கும்போது ஒரு சிலருக்கு மனசு மிக கனமாகி கண்களில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர் கொட்டும்.. தொண்டையெல்லாம் யாரோ போட்டுப் பிசைவது போல இருக்கும். குரலும் கம்மும்.. நீங்கள் அப்படிப்பட்ட ரகமா?

அப்படியென்றால் என் வாழ்த்துக்கள்! நீங்கள் இன்னும் உங்கள் உணர்வுகள் மரத்துப்போகாதபடி உயிர்ப்புடன் இருக்கிறீர்கள்!

நீங்கள் அழுவதையோ, அல்லது தொண்டைக் கமறலோடு பேசமுடியாமல் திணறுவதையோ பார்த்து ஒருசிலர் கிண்டல் செய்கிறார்களா? செய்துவிட்டுப் போகட்டும்.. அவர்களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். பாவம், இன்றைய அவசர கால யுகம் அவர்களை அப்படி எந்த உணர்வையும் பெரிதாக எடுத்துக் கொள்ள முடியாதபடி உணர்வுகளை மரத்துப் போக வைத்திருக்கிறது..

ஒரு சிலர், ‘இதெல்லாம் படம்தானே?.. சும்மா, நடித்துதானே காட்டுகிறார்கள்’ என்ற தெளிவுடன்கூடச் சொல்லலாம். சரி, சொல்லிவிட்டுப் போகட்டும்..
இது செய்தி, இது நிஜம், இது படம் அல்லது நாடகம் என்று வித்தியாசப்படுத்தி, உணர்வுகளை நாம் அடக்கி வைத்து வெளிக்காட்ட முடியாதது ஒன்றும் மிகப் பெரிய தவறல்ல.

நான்கூட இதுபோன்ற உணர்வுகளால் எப்போதும் பாதிக்கப்படும் ரகம்தான்..

‘படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாலேயே லோகநாயகி கையில் பேசாம ரெண்டு கர்ச்சீப் தந்திடுங்கப்பா.. அப்போ தான் சரியா வரும்!’ என்று பத்திரிகையின் திரைவிமர்சனத்துக்காக ஒன்றாகச் செல்லும்போது, முன்பு நண்பர்கள் கிண்டல்கூட செய்வது வழக்கம்.. ஆனால், நான் அதையெல்லாம் எப்போதும் கண்டுகொண்டதில்லை..

ஒருவகையில் என்னைக் கேட்டால், இப்படி என் உணர்வுகள் அழுகையாகவோ, தொண்டைக் கமறலாகவோ வெளிப்படுவது என்பது, என் உணர்வுகள் இன்னும் முழுசாக மரத்துப் போகாமல் உயிர்ப்போடு இருக்கிறது.. என் உணர்வுகள் ஊமையாகி விடாமல் அந்தந்த சூழலுக்கு ஏற்ப சரியாக ரியாக்ட் ஆகிறது என்று அர்த்தம் சொல்வதாக எடுத்துக் கொள்கிறேன்.

சொல்லப்போனால் சமீப காலமாக அதிக ரத்தம், அதிக அழுகை, அதிக கஷ்டங்களுக்கு எக்ஸ்போஸ் ஆகி ஆகி, நம்மில் பலருக்கு உணர்வுகள் மரத்துப் போய்விட்டது என்று தோன்றுகிறது!
அதிலும் இந்த டி.வி.யும் வந்த பின்பு, செய்தியைப் போட்டாலே வெட்டு, கொலை, பாலியல் வன்முறையால் கொலை என்று ரத்த ரணகளங்களும் அழுகைகளும் அதிகமாகிவிட்டன..

போதும் போதாததற்கு, டி.வி. சீரியல்களில் எப்படி விதம்விதமாகப் பழி வாங்குவது, விதம்விதமாகக் கொலை செய்வது என்று விலாவாரியாகக் காட்டி, அது போன்ற செயல்பாடுகளை, ஜஸ்ட் லைக் தட் நாம் கடந்து போகும்படி ஒரு ‘உணர்வு மரத்துப் போகும் தன்மை’யை நமக்குத் தந்து விட்டன!

ரோட்டில் யாரோ ஒருவர் அடிபட்டு விழுந்து கிடந்தால், முன்பெல்லாம் மொத்த ரோடும் பதற்றத்தோடும், ‘என்னாச்சோ’ என்ற தவிப்போடும், ‘உதவி ஏதும் தேவைப்படுமா?’ என்ற வாஞ்சையோடும் விபத்து நடந்த அந்த இடத்தில்தான் நிற்கும். ஆனால், இன்று என்ன நிலை என்று அடிபட்டு விழுந்த நாமே உணர்ந்திருக்கிறோமே! பலர், கார், டூ வீலர் என்று ஓட்டிக் கொண்டே கடந்து போவார்கள். மனசில் ஈரம் மிச்சமிருக்கும் ஒரு சிலர் ஓடிவந்து உதவுகிறார்கள்.

சமீபத்தில் ஒரு வீட்டுக்குப் போயிருந்தபோது வீட்டின் இரண்டு டீன் ஏஜ் பிள்ளைகள் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார்கள். டி.வி.யில், ஒரு விபத்தில் பலியான மூன்று இளைஞர்கள் பற்றிய செய்தி ஓடிக் கொண்டிருந்தது.. அதுவும் அந்த வீட்டுத் தாத்தா செய்தி பார்ப்பவர் என்பதால்.. பதற்றத்துடன் கதறிக் கொண்டிருந்தார்கள் விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்தினர்..

ரத்தச் சகதியோடு இருந்த அந்த இளைஞர்களை டி.வி.யில் பார்த்தபடியே ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்த இரு டீன் ஏஜ் பிள்ளைகளும், இறந்து கிடந்த இளைஞர்கள் வைத்திருந்த ஹேர்ஸ்டைல், தாடி பற்றி ஏதோ கமென்ட் அடித்துக் கொண்டிருந்தார்கள்.
இதுபோன்ற ரத்தச் சகதிகளைப் பார்த்துப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக பெரியவர்களே எரிச்சல் படும்போது, சிறு பிள்ளைகளையும், டீன் ஏஜ் வயதில் உள்ளவர்களையும் பற்றி என்ன சொல்வது? அவர்கள் பிறந்ததிலிருந்தே இதுபோன்ற வன்முறைகளையும் ரத்தத்தையும் டி.வி. புண்ணியத்தில் சகஜமாகப் பார்ப்பதால், உண்மையில் தேவையான நேரங்களில் தேவையான விஷயங்களுக்கு ரியாக்ட் ஆகும் அவர்களது மென் இயல்புகள் தொலைந்துவிடும் ஆபத்து இருப்பதாகப்படுகிறது எனக்கு!

தொட்டதற்கெல்லாம் அழும் பய உணர்வைப் பற்றி நான் இங்கே குறிப்பிடவில்லை..
பயத்தில் ஏற்பட வேண்டியது அதை ஹேண்டில் செய்யத் தேவைப்படும் தைரியமும், அதற்கான தீர்வுகளுமே தவிர அழுகை அல்ல!..

நான் சொல்வது மனிதம் காக்கும் உணர்வுகள்.. நம்மைச் சுற்றியிருப்பவர்களது ஒரு நல்ல ஆசை, மிகக் கஷ்டங்களுக்கு இடையே நிறைவேறும்போது அதை வாழ்த்தும் விதத்தில் நமக்கு அழுகை வருவதுண்டு! இது ஒரு வகையில் ஆனந்தக் கண்ணீர்!
தன் கஷ்டங்களை மறைத்துக் கொண்டு மற்றவர்கள் கஷ்டத்தை எடுத்துச் செய்பவனைப் பார்க்கும்போது அதைப் பாராட்டும் விதத்தில் அழுகை வருவதுண்டு..

நம்மைச் சுற்றி நெகிழ்வான விஷயங்கள் நிகழும்போது அதை உணரும் விதமாக சிலருக்கு அழுகை வருவதுண்டு.. இதெல்லாம் நெகிழ்ச்சிக் கண்ணீர்!

‘கண்ணீர்’ என்பது வெறும் உப்பு நீரல்ல.. அது நம் உணர்வு! ஒருவகையில் நம் செயல்பாடுகளின் ஆரம்பப் புள்ளி.. அது தூண்டும் உணர்வுகளால்தான் நாம் நம் வாழ்க்கையில் பல செயல்பாடுகளை அமைத்துக் கொள்கிறோம். அதுதான் நமக்கு உறவுகளையும் நண்பர்களையும் சரியாகக் கையாள கற்றுத் தருகிறது!..
அதுதான் நாம் யார் என்று நமக்கே அடையாளம் சொல்கிறது!

– Loganayaki ramachandran #மீள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here