மனிதனுக்கு கண்ணீர் அஞ்சலி

0
176

கடந்த சில நாட்களாகவே நான் தொலைக்காட்சி செய்திகளை பார்ப்பதை அட்சர சுத்தமாக நிறுத்தி இருந்தேன்.
சமூக வலைதளங்கள் மூலமாகவே சமீபத்திய செய்திகளை அறிந்த வண்ணம் இருந்த எனக்கு
இன்றைய அன்றாட நிகழ்விற்கு பின்பே, இணையதளம் வந்த என்னை மிகவும் பாதித்தது திருச்சியில் சாலையில் சென்ற கணவன் மனைவியின் இருசக்கர வாகனத்தை காவல் துறை ஆய்வாளர் எட்டி உதைத்ததில் கீழே விழுந்த கர்ப்பிணி பெண் மீது சாலையில் வந்து கொண்டிருந்த வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே அப்பெண் பலியானார் என்ற செய்தி. செய்தியை கேட்டதிலிருந்தே என் மனம் கனமாகி வெறுமையாகிவிட்டது.

நான் நித்தமும் எனது வீட்டிலிருந்து எனது மருத்துவ நிலையம் அமைந்துள்ள பகுதிக்குச் செல்ல ஏழு நிமிடங்கள் ஆகும்
ஆனால் தற்கால வாகன பெருக்கத்தின் காரணமாக
ஏற்படும் வாகன போக்குவரத்து நெருக்கடியின் நீட்சியாக முப்பது நிமிடங்கள் ஆகிறது.
மாலையில் எனது புதல்வர்களோடு நான் மருத்துவ நிலையத்தில் இருந்து வீட்டிற்குச் செல்லும் வரை பதைபதைப்போடு செல்லும் நிலையே இங்கு உள்ளது.

பெண்கள் குழந்தைகளோடு வாகனத்தில் சென்றாலும் எங்கள் வாகனத்தை நிறுத்தி வாகனச் சான்றிதழ்களை கேட்பார்கள்.
அது சட்ட ரீதியானது என நிறுத்தி பதில் கொடுத்தால் நம்மை பெண் என்று ஏளனமாக பார்ப்பார்கள். சக குடியுரிமை கொண்ட நாட்டு குடிமகள் என்கிற மரியாதை யாருக்கும் இருக்காது. மகளிர் தின பதிவாக பெண்கள் தங்கள் வாழ்வில் தொடர்ந்து பயணிக்கும் சூழல்களில் எதிர்கொள்ளும் பல துர்அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என்றே நான் நினைத்திருந்தேன்
ஆகினும் இன்றைய கர்ப்பிணி பெண் படுகொலை சாலையில் பயணிக்கும் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்மம் மிக்க வன்முறைகளைப் பற்றி பேச வைத்து விட்டது.

அப்பெண்ணின் மரணம் மன்னிக்க முடியாதது ஆனாலும் அதைப்பற்றி பேச நாம் அனைவரும் நியாயமானவர்களா ?
சாலை விதிகள் முற்றிலும் காற்றினில் பறக்க விடப்பட்டுள்ளன.
ஒருவர் தவறாக சாலையினில் விழுந்தால் கூட அவர் மீது கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் வரும் வண்டி அவர் மீது ஏற்றியே தீர வேண்டிய சூழல் தான் இங்கு இருக்கிறது.

உயிர்கவசம் என்று நம் உயிர் மீது அக்கறை காட்டுவதாக கூறும் காவல் துறை ஏட்டிக்கு போட்டியாக நினைத்த இடத்தில் வண்டியை நிறுத்துவதும் நினைத்த வேகத்தில் செல்வதுமாக இருக்கும் மினி பஸ் , சேர் ஆட்டோவை ஒழுங்குபடுத்தாமல் இருப்பது ஏனோ தெரியவில்லை !!

பின் வரும் வாகனத்தில் வரும் நபர்கள் ,அவ்வாகனம் நிற்கப் போகிறதா இல்லை வளையப் போகிறதா இல்லை வேகமாக போகப் போகிறதா என தெரியாமல் விழித்து இடரில் மாட்டி கொள்ளும் நிலையே இங்கு அதிகம்.

சாலை என்பது பயணிப்பதற்கு தானே அன்றி அடுத்தவரை பலியாக்குவதற்கு அன்று என மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் .
இனி வரும் காலம் மக்களுக்கு பாதுகாப்பான சூழலை அரசு அதிகாரிகளும் சக மனிதர்களும் ஏற்படுத்தி தர யாவரும் சக மனித உயிரின் மதிப்பை உணர்ந்து செயல் பட வேண்டும் .

அந்த காவல் துறை அதிகாரி செய்தது பெரும் தவறு .ஆனால் ஒரே நிமிடம் நம் செயலையும் நாம் சுயப்பரிசோதனை செய்து பார்ப்போம். எத்தனை கர்பிணிப் பெண்களின் வாகனத்தையும் குழந்தைகள் அமர்ந்திருக்கும் வாகனத்தையும் நாம் முந்திச் செல்கிறோம் என்ற பெயரில் அவர்களை அச்சுறுத்தி கடக்கிறோம் ?

காவல் துறையை கண்டிக்கும் அதே வேளையில் நாமும் பிற உயிர்களை மதிப்போம் என்று உறுதியெடுப்போம் !!

– Preetha nila

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here