மருத்துவம் இலவசம் அல்ல

0
195

மருத்துவம் சேவை என்ற புள்ளியில் இருந்து வணிகம் என்ற புள்ளிக்கு நகர்ந்து கொண்டே இருக்கிறது என்ற தொடர் குற்றச்சாட்டுகள் வந்துகொண்டே இருக்கிறது. சமீபத்தில் இந்திய குடியரசு தலைவர் மருத்துவர்கள் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கருத்தை பதிவு செய்த போது பல்வேறு விதமான விமர்சனங்களை மருத்துவர்கள் முன்வைத்தனர். மருத்துவம் ஏன் சேவை என்ற நிலையில் இருந்து மாறுபடுகிறது என்பதற்கு பல்வேறு காரணிகள் இருக்கிறது. இங்கே சேவை என்பது எனது பார்வையில் இலவசம் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை சேவை என்பதை சிறந்த வைத்திய முறை என்றோ சரியான நோயறிந்து சரியான மருந்தை பரிந்துரை செய்வது என்று எடுத்துக்கொள்ளலாம்.

சரியான நோய் அறிதல் என்பதில் சில மருத்துவர்கள் குறிப்பாக மருத்துவத்தை பணம் கொண்டு படித்து தேர்ச்சியடைந்தவர்கள் தவறு இழைக்கிறார்கள். இன்னொரு பக்கம் படித்த புரிதல் உடைய நபர்கள் கூட முறையாக மருத்துவம் பயிலாத நபர்களிடம் ஊடகங்களில் காட்சிப்படுத்துகிறார்கள் என்ற ஒற்றை காரணத்தை முன்னிறுத்தி அவர்களிடம் சென்று வைத்தியம் பார்த்து முடிவில் சித்த ஆயுர்வேத மருத்துவம் பயனளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள்.

இது எல்லாம் ஒரு புறம் இருக்க. சத்தமில்லாமல் மருந்தின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக சித்த ஆயுர்வேத மருந்துகளின் விலைப்பட்டியலைக்கண்டு மருத்துவர்களே திணறிக்கொண்டிருக்கின்றோம் என்பது தான் உண்மை. என்று நம் வீட்டில் இலவசமாக நாம் பறித்து பயன்படுத்திய முருங்கைக்காயிற்கும் பப்பாளிக்கும் ஒரு விலை நிர்ணயக்கிப்பட்டதோ அன்றே மூலிகைச்செடிகளின் விலை உயர்ந்தது என்பதை நாம் உணர வேண்டும். கருவேப்பிலைக்கு ஐந்து ரூபாய் கொடுத்து வாங்கும் நிலையில் தான் நாம் இன்றிருக்கிறோம் எனும் போது பல மூலிகைகள் உள்ளடங்கிய லேகியம் கசாயம் மருந்துகளின் விலை உயர்வதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

போதாக்குறைக்கு gst என்று ஒவ்வொரு மருந்திற்கும் விலை ஏற்றப்பட்டுள்ளது. இவை அனைத்தும் நோயாளிகளின் தலையில் விடியும் என்பதும் இதில் இலவச சேவையை எப்படி கொடுப்பது என்ற புரியாத நிலையில் மருத்துவர்கள் தவிக்கிறார்கள் என்பது தான் உண்மை.
மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் இருந்து வாங்காமல் மருத்துவர்களே நேரடியாக மூலிகைகளை விளைவித்து மருந்து தயாரித்தாலும் அதன் அடிப்படை தேவையான பொருட்களின் விலையும் அதிகம்.

பதஞ்சலி போன்ற வட இந்திய நிறுவனங்கள் தமிழ்நாட்டை வணிக பார்வையில் படையெடுக்க தொடங்கிய பின் ஒவ்வொரு மருந்தின் விலையும் மூலிகைகளின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது என்பதை எந்த மருத்துவர்களாலும் மறுக்க இயலாது.

ஆக இங்கே சேவை என்பதை இலவசம் என்று எடுத்துக்கொள்ள முடியவே முடியாத நிலையில் தான் நாம்
உள்ளோம்.

மஞ்சள் கயிற்றை மட்டும் கழுத்தில் ஏந்தி என் மருத்துவமனை வரும் பெண்களை கண்டாலே உண்மையில் எனக்குi உடல் நடுங்க தொடங்குகிறது.ஒரே ஒரு கசாயம் இரண்டு மாத்திரை என ஒரு வாரத்திற்கு நான் மருந்து எழுதினாலே 300 ரூபாயை தொடும் !!

அனைத்து பிரச்சனைக்குமான ஒரே ஒரு தீர்வு தான் நம்மிடம் இருக்கிறது. அது வரும் முன் காத்தல் !!

– Preetha Nila

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here