“விஜய், சூர்யா, விஜய் சேதுபதியிடம் இந்தக் கேள்வியைக் கேட்பீர்களா?” – அமலாபால் காட்டம்

0
36

‘விஜய், சூர்யா, விஜய் சேதுபதியிடம் குழந்தைக்குப் பெற்றோராக நடிப்பது குறித்து கேள்வி கேட்பீர்களா?’ என காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார் அமலாபால்.

சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. அரவிந்த் சாமி – அமலாபால் இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். மலையாளத்தில் வெளியான ‘பாஸ்கர் த ராஸ்கல்’ படத்தின் ரீமேக் இது. இரண்டு குழந்தைகளுக்குப் பெற்றோராக இருவரும் நடித்துள்ளனர். இன்று (மே 11) வெளியாவதாக இருந்த இந்தப் படம், பைனான்ஸ் பிரச்சினையால் அடுத்த வாரத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்த அமலாபாலிடம், ‘இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தால், உங்களின் ஹீரோயின் இமேஜ் பாதிக்கப்படாதா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, “நடிகைகளிடம் மட்டும் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள் எனத் தெரியவில்லை. இந்தக் கேள்வியை அரவிந்த் சாமி, சூர்யா, விஜய், அவ்வளவு ஏன்… இளம் நடிகர் விஜய் சேதுபதியிடம் கேட்பீர்களா? அவர்களிடம் இதைக் கேட்காமல், நடிகைகளிடம் மட்டும் ஏன் பெரிதுபடுத்திப் பார்க்கிறீர்கள்? நாங்களும் நடிகர்கள் தான்.

என்னிடம் இயக்குநர்கள் கதை சொல்லும்போது, என்னுடைய கேரக்டருக்கு குழந்தை இருக்கா, இல்லையா என்றெல்லாம் நான் பார்க்க மாட்டேன். அதற்கு ஒரு தேவை, சூழ்நிலை இருக்கிறது. அதுதான் முக்கியம். ‘அம்மா கணக்கு’ படத்துக்குப் பிறகு, ‘தொடர்ந்து இதுமாதிரி படங்களில் தான் நடிப்பீர்களா?’ என்று நிறைய பேர் கேட்டார்கள்.

ஆனால், அதன்பிறகு நான் அப்படியே நடிக்கவில்லையே… முழுவதும் வேறு வேறான வேடங்களில்தானே நடித்தேன். இது மிகப்பெரிய விஷயம் கிடையாது. இது ஒரு படம், கலை. அதில் நான் இதுபோன்ற விஷயங்களை எல்லாம் பார்ப்பது கிடையாது. இது தவறான கேள்வி, தவறான நம்பிக்கையும் கூட. இதை நடிகைகளிடம் மட்டுமே கேட்பது முழுவதும் தவறான விஷயம்” என காட்டத்துடன் பதில் அளித்துள்ளார் அமலாபால்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here