இலங்கை: காணாமல் போய் திரும்பக் கிடைத்த இந்திய திரைப்பட விருது

0
46

இலங்கையின் அண்மை சோகம் சிங்கள திரையுலகின் தந்தையாக வர்ணிக்கப்படும் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் அவர்களின் மறைவு. ஆனால், அவரது இறுதி நிகழ்வுகளின் போது ஓரமாக இன்னுமொரு சோகம் நடந்திருக்கிறது.

அவரது இறுதி நிகழ்வுகளுக்காக கத்தோலிக்க தேவாலயத்தில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த போது, அதன் அருகே, அவர் இந்தியாவில் வாங்கிய தங்க மயில் விருதின் மாதிரி ஒன்று அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இறுதி நிகழ்வின் போது அது திருடப்பட்டுவிட்டது

எப்படி இது நடந்திருக்கும் என்பது எல்லோருக்கும் இங்கு பெரும் ஆச்சரியமாகவும் சங்கடமாகவும் இருந்தது. ஒரு மேதையின் மரண நிகழ்வில் அவருக்கு கிடைத்த ஒரு சர்வதேச விருது தொலைந்துவிட்டதே என்பது இங்கு பெரும் கவலையாக, ஆச்சரியமாக பேசப்பட்டது.

அதனை தேடும் முயற்சியில் போலீசார் மிகவும் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால், அவர்களால் திருடனைப் பிடிக்க முடியவில்லை.

ஆனால், ஆச்சரியப்படும் வகையில் கொழும்பில் இருந்து புறநகர்பகுதி சென்ற பேருந்து ஒன்றின் கூரையில் அதனைக் கண்டெடுத்த பேருந்தின் நடத்துனர் அதனை தங்களிடம் ஒப்படைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போய் திரும்பக் கிடைத்த இந்திய விருது

இங்கு முக்கிய விடயம் என்னவென்றால் இப்போது அவரது இறுதி நிகழ்வில் காணாமல் போனதும், திரும்பக் கிடைத்ததாகக் கூறப்படுவதும் அவரது தங்கமயில் விருதின் தங்க முலாம் பூசப்பட்ட மாதிரிதான். உண்மையான விருது அல்ல.

உண்மையான விருதுக்கு என்ன நடந்தது?

உண்மையில் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸுக்கு இந்த தங்கமயில் விருது மனதுக்கு மிகவும் பிடித்த ஒன்று என்று கூறப்படுகிறது. ஏனென்றால் இந்தியாவில், டில்லி சர்வதேச திரைப்பட விழாவில் கிடைத்த இந்த விருதுதான், இவரது 50 வருட திரைப்பட வாழ்வில் அவர் பெற்ற முதலாவது சர்வதேச விருது

1964 இல் அவர் இயக்கிய கம்பெரலிய (கிராமத்தின் மாற்றம்) என்ற பிரசித்திபெற்ற சிங்களத் திரைப்படத்துக்காக 1965இல் இந்த விருது வழங்கப்பட்டது. இந்தக் கதையை எழுதியவர் சர்வதேச பிரபலம்பெற்ற சிங்கள எழுத்தாளரான மார்ட்டின் விக்கிரமசிங்க. அந்த விருது 18 கேரட் தங்கத்தில் செய்யப்பட்டதென்று கூறப்படுகிறது. அந்தக் காலப்பகுதியில் அதிகப்படியாக 18 கேரட் தரத்திலான தங்கத்தைத்தான் இந்தியாவில் இருந்து வெளியே கொண்டுபோக அனுமதி இருந்தது. அதனால்தான் அது 18 கேரட்டில் வழங்கப்பட்டுள்ளது.

காணாமல் போய் திரும்பக் கிடைத்த இந்திய விருது

முன்னரே காணாமல்போன மூல விருது

ஆனால், புதுடில்லி சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்பட்ட 18 கேரட் தங்கத்திலான அந்த விருது அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரிடம் இருந்தபோது அப்போதே காணாமல் போய்விட்டது. அதற்கு என்ன நடந்தது என்பது இன்றுவரை மர்மமாகவே இருக்கிறது. அதனை அப்போது இழந்தது லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸுக்கு பெரும் கவலையாம்.

ஆனால், பின்னர் 2,000 ஆம் ஆண்டில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் காணாமல் போன அந்த தங்கமயில் விருதுக்குப் பதிலாக இந்திய அரசாங்கம் புதிய “மாதிரி” விருது ஒன்றை அவருக்கு கொடுத்திருந்தது. அது தங்க முலாம் பூசபட்டது.

அதுதான் இப்போது காணாமல்போய், திரும்பக் கிடைத்துள்ளது. ஆனால், அந்த உண்மையான விருதுக்கு என்ன நடந்தது என்பது இதுவரை மர்மமாகவே இருக்கிறது.

தனது 50 வருட சினிமா வாழ்க்கையில் 20 முழுநீளப் படங்களை தயாரித்த லெஸ்டருக்கு பல சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளன.

ஹிந்தி சினிமாவின் ஆதிக்கத்தில் இருந்த சிங்கள சினிமாவை காப்பற்றியவர் என்று அவரை இலங்கை சினிமா ரசிகர்கள் புகழ்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here