“முதன்முதலில் ரஜினி சாருக்காகப் பாடியதில் சந்தோஷம்” – பாடலாசிரியர் விவேக்

0
33

‘முதன்முதலில் ரஜினி சாருக்காகப் பாடியதில் சந்தோஷம்’ எனத் தெரிவித்துள்ளார் பாடலாசிரியர் விவேக்.

சித்தார்த் நடிப்பில் வெளியான ‘எனக்குள் ஒருவன்’ படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் விவேக். ஜோதிகாவின் ‘36 வயதினிலே’ படத்தில் இடம்பெற்ற ‘வாடி ராசாத்தி…’ பாடல் மூலம் பரவலாகக் கவனம் பெற்றவர், அதன்பிறகு நிறைய பாடல்கள் எழுதியுள்ளார். விஜய்யின் ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களையும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் எழுதினார்.

இந்நிலையில், ‘காலா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘நிக்கல் நிக்கல்’ பாடலின் மூலம் பின்னணிப் பாடகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். ‘தி இந்து’ சார்பில் அவருக்குப் போன் பண்ணி ‘வாழ்த்துகள்’ சொன்னேன். “நன்றி ப்ரதர். பாடலுக்கு நிறைய ரெஸ்பான்ஸ் வந்து கொண்டிருக்கிறது. பாட்டைக் கேட்டுவிட்டு உங்களை மாதிரியே நிறைய பேர் போன் பண்ணி வாழ்த்து சொல்றாங்க. எல்லாத்துக்கும் சந்தோஷ் சாருக்கு தான் நன்றி சொல்லணும்.

திடீர்னு ஒருநாள் அழைத்தார். ஏதோ படத்துக்குப் பாடல் எழுதக் கூப்பிடுகிறார் என நினைத்தேன். ‘காலா’ படத்துக்காக ஒரு பாடல் பாடணும்னு சொல்லி, ‘நிக்கல் நிக்கல்’ பாடலோட வரிகளைக் கொடுத்தார். ‘பதுங்கி அடங்கி வாழ நாங்க என்ன ஸ்லேவா?’ என்பதில் தொடங்கி, பாடல் முடியும்வரைப் பாடியிருக்கிறேன். நான் பாடும்போது தனியாகத்தான் பாடினேன். பின்னர்தான் நான் பாடியதுடன் டோபடெலிக்ஸ் பாடியதையும் சேர்த்து மிக்ஸ் செய்திருக்கிறார் சந்தோஷ்.

நான் பாடணும்னு என் அம்மாவுக்கு ரொம்ப ஆசை. அதுவும் முதல் பாடலே ரஜினி சாருக்காக இவ்வளவு பெரிய படத்தில் அமைந்ததில் மிகப்பெரிய மகிழ்ச்சி. முழு கிரெடிட்டும் சந்தோஷ் சாருக்கு தான்” என்றவரிடம், ‘தொடர்ந்து பாடுவீர்களா?’ என்று கேட்டோம்.

“தெரியலை பாடணும்னு ரொம்ப ஆசை, பாடுறது எனக்குப் பிடிக்கும். ஆனால், அதற்கான முழுத்திறமை எனக்கு இருக்கிறதா எனத் தெரியவில்லை. போகப்போக திறமையை வளர்த்துக் கொண்டு பாடலாம்னு இருக்கேன்” என்று தெரிவித்தார் விவேக்.

‘நிக்கல் நிக்கல்’ பாடலை டோபடெலிக்ஸ், லோகன் இருவரும் இணைந்து எழுதியிருக்கின்றனர். டோபடெலிக்ஸ், அருண்ராஜா காமராஜ் ஆகியோருடன் இணைந்து இந்தப் பாடலைப் பாடியுள்ளார் விவேக். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here